நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை ‘டான்’ திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரு முன்னணி நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடிக்க இருப்பதால் இந்த திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளார். இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் இணையும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் பணியாற்ற உள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி வெளியிடப்பட்டது.அந்த காணொளியில் கமலும் ரஜினியும் இணைந்து இயக்குநர் நெல்சனிடம் “இந்த திரைப்படத்தின் நாயகன் யார்?” என்று கேட்பது போன்ற நகைச்சுவை தருணங்கள் இடம்பெற்றுள்ளன. இது ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் இந்த திரைப்படத்தில் யார் நாயகன் என்ற விவாதம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கூறுகையில், இது மிகவும் சிறப்பான தருணம் என்றும், 47 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு பெரிய நடிகர்கள் இணைவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். அது தனது வயதை விட அதிக கால இடைவெளி என்றும் அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
மேலும் இயக்குநர் நெல்சனுக்காக மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், முன்னோட்ட காணொளிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார். இருவரும் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படம் நகைச்சுவையும் பொழுதுபோக்கும் நிறைந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த திரைப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்பதை இயக்குநரிடம் கேட்டால்தான் சரியான பதில் கிடைக்கும் என்றும் அனிருத் தெரிவித்துள்ளார்.
