உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன், தனது தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் ஈர்க்கும் திரைக்கதைகளால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். ‘பேட்மேன்: தி டார்க் நைட்’, ‘இன்செப்ஷன்’, ‘தி பிரெஸ்டீஜ்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது படைப்பாற்றலின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக கருதப்படுகின்றன.
குறிப்பாக அறிவியல் புனைவு மற்றும் உளவியல் சார்ந்த கதைகளை வித்தியாசமான திரைக்கதைகளுடன் உருவாக்குவதில் அவர் தனி முத்திரை பதித்துள்ளார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று 7 ஆஸ்கார் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. தனது திரைப்படங்களில் பார்வையாளர்களுக்கு மிகத் துல்லியமான காட்சி அனுபவத்தை வழங்குவதற்காக ஐமேக்ஸ் கேமராக்களை அதிக அளவில் பயன்படுத்தும் நோலன், கணினி கிராபிக்ஸ் காட்சிகளை முடிந்தவரை தவிர்த்து இயல்பான படப்பிடிப்புக்கு முன்னுரிமை அளிப்பவராக அறியப்படுகிறார்.
இந்த நிலையில், கிறிஸ்டோபர் நோலன் தனது 13வது திரைப்படமாக ‘தி ஒடிசி’ (The Odyssey) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கிரேக்கக் கவிஞர் ஹோமர் எழுதிய புகழ்பெற்ற புராண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக அறிவியல் புனைவு மற்றும் வரலாற்று பின்னணியிலான கதைகளைத் தேர்வு செய்து வந்த கிறிஸ்டோபர் நோலன், முதல் முறையாக முழுமையான புராணக் கதையை திரைப்படமாக உருவாக்கியிருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு குறித்து சில தரப்பினரிடமிருந்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. சமீப காலமாக ஹாலிவுட்டில் உருவாகும் பல திரைப்படங்களில் ‘வோக்’ (Woke) கலாசாரம் அதிகமாக இடம்பெறுவதாக சில ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது, கதைக்கு நேரடியாகத் தேவையில்லாத நிலையிலும் சமூக நீதி, பன்முகத்தன்மை, பாலின சமத்துவம், தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட கருத்துகள் திரைப்படங்களில் வலியுறுத்தப்படுவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், ‘தி ஒடிசி’ திரைப்படமும் இந்த விவாதத்தின் மையமாக மாறியுள்ளது. குறிப்பாக ‘ஹெலன்’ கதாபாத்திரத்தில் நடிகை லூபிடா நியாங்கோ நடிக்க உள்ளதாக வெளியான தகவல் சில ரசிகர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேக்க புராணங்களில் பேரழகியாக வர்ணிக்கப்படும் ஹெலன், மன்னர் மெனலஸின் மனைவியாகவும், டிராய் இளவரசனுடன் சென்றதன் காரணமாக டிரோஜன் போர் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய கதாபாத்திரத்தில் கருப்பின நடிகையை தேர்வு செய்திருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த கிறிஸ்டோபர் நோலன், “இலியட் காவியம் பல நூற்றாண்டுகளாக செவிவழியாக மக்களிடம் பரவிய ஒரு கதை. அதனை பிரதிபலிக்கும் விதமாகவே டிராவிஸ் ஸ்காட் உள்ளிட்ட கருப்பின கலைஞர்களை இந்த திரைப்படத்தில் இணைத்துள்ளோம்” என்று விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம் நடிகர் தேர்வுக்கான தனது அணுகுமுறையை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
‘தி ஒடிசி’ திரைப்படம் வரும் ஜூலை 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐமேக்ஸ் திரையிடலுக்கான முன்பதிவுகள் தொடங்கியவுடன் டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்றுத் தீர்ந்தன. இந்தியாவிலும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான முன்பதிவுகளில் புதிய சாதனையை இந்த திரைப்படம் படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடலுக்காக கிறிஸ்டோபர் நோலன் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக நோலன் திரைப்படத்திற்கான சிறப்பு திரையிடல் நடைபெற உள்ளது. இதற்காக ஜூலை மாதத்தில் அவர் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் அவரது மனைவியும் தயாரிப்பாளருமான எம்மா தாமஸ், நடிகர்கள் டாம் ஹாலண்ட் மற்றும் மேட் டேமன் ஆகியோரும் இந்தியா வரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்திய ரசிகர்களிடையே இந்த திரைப்படம் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
