பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் 2021-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களும் கவனம் பெற்றன.
படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான பணிகள் கடந்த சில காலமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பே தொடங்கியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் பாகம் முதல் படத்தின் கதையை நேரடியாக தொடராமல், அதற்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ப்ரீக்வெல் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ‘காட்சி 1, நாள் 1, டேக் 1’ என குறிப்பிடப்பட்டுள்ளதால், ‘சார்பட்டா 2’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
