மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் மம்முட்டி, தமிழ் திரையுலகிலும் ‘மவுனம் சம்மதம்’, ‘அழகன்’, ‘தளபதி’, ‘கிளிப்பேச்சு கேட்கவா’, ‘அரசியல்’, ‘மறுமலர்ச்சி’, ‘ஆனந்தம்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல்வேறு முக்கியமான திரைப்படங்களில் நடித்துள்ளவர். சமீபத்தில் கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது மம்முட்டிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மம்முட்டி பெறும் 7-வது கேரள மாநில திரைப்பட விருது இதுவாகும். ‘பிரம்மயுகம்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பிற்காக இந்த சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1984, 1989, 1993, 2004, 2009 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசின் விருதுகளை அவர் வென்றுள்ளார். குறிப்பாக, 2023ஆம் ஆண்டு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்திற்காக மம்முட்டி சிறந்த நடிகர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம், 19ஆம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்தில் நடைபெறும் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு ஹாரர் திரில்லர் படமாகும். கருப்பு-வெள்ளை வடிவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், மம்முட்டி 80 வயதான ஒரு மந்திரவாதியின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கியிருந்தார். மேலும், இங்கிலாந்தில் உள்ள ஒரு கலை மற்றும் பண்பாட்டுப் பல்கலைக்கழகத்தில் திரைப்பட பயிற்சி பிரிவில் பயிலும் மாணவர்களுக்காக ‘பிரம்மயுகம்’ திரைப்படம் ஒரு பாடமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில், கேரள திரைப்பட விருது விழாவில் ‘பிரம்மயுகம்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் மம்முட்டி வென்றுள்ளார். இந்த விருதை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் கைகளால் மம்முட்டி பெற்றுக் கொண்டார்.
