சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக உருவாகும் ‘எஸ்கே 27’ படத்தின் பணிகள் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். அவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த புதிய படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, ராம்குமார் பாலகிருஷ்ணன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் ‘எஸ்கே 27’ படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
‘பார்க்கிங்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற ராம்குமார் பாலகிருஷ்ணன், தனது புதிய படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எக்ஸ் தள பதிவின் மூலம் பகிர்ந்திருந்தார். ‘எஸ்கே 27’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல; இன்று தொடங்கும் ஒரு கனவு என்று குறிப்பிட்ட அவர், சிவகார்த்திகேயனுடன் புதிய அத்தியாயத்தை தொடங்குவது பெரும் பாக்கியம் என்றும், அனைவரின் ஆசிகளும் ஆதரவும் தேவை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன், கயாடு லோகர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எஸ்கே 27’ படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
