‘Granny’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

லண்டனில் வசித்து வரும் ஆனந்த் நாக், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கிராமத்திற்குத் திரும்பி வருகிறார். அங்கு உள்ள ஒரு பழமையான வீட்டில் குடியேறி விவசாயம் செய்யலாம் என்ற எண்ணத்தில் அவர் திட்டமிடுகிறார். அந்த நேரத்தில், பரிதாபமான நிலையிலுள்ள க்ராணி (பாட்டி) தோற்றத்தில் வடிவுக்கரசி அந்த வீட்டிற்கு வருகிறார். வீட்டில் இருக்கும் குழந்தைகளை கொன்று, அவர்களின் இதயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கொடூர நோக்கத்துடன் அவர் செயல்படுகிறார். உண்மையில் வடிவுக்கரசி யார், குழந்தைகளின் இதயத்தை அவர் ஏன் விரும்புகிறார், அவரது திட்டம் நிறைவேறியதா, அதை தடுக்க முயலும் காவல்துறையினரான சிங்கம்புலி மற்றும் திலீபனுக்கு என்ன நடந்தது என்பதையெல்லாம் சற்று பயம் கலந்த ஓட்டத்தில் சொல்லும் திரைப்படமாக ‘க்ராணி’ உருவாகியுள்ளது.

பேய் படம் போல தோன்றினாலும், இது முழுக்க பேய் கதை அல்ல; மந்திர, தந்திரங்கள் மற்றும் கற்பனை கலந்த ஒரு திகில் கதையாக இதை பார்க்கலாம். எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசையால் இயக்கப்படும் இரண்டு பேராசைக்காரர்களின் கதையாகவும் இதை கூறலாம். கேரள பாணியில் அமைந்த அந்த பழைய வீட்டிற்கு வரும் குடும்பம், மாற்றுத்திறனாளி குழந்தைகள், அந்த ஊரில் நடக்கும் மர்ம கொலைகள் என ஆரம்பத்தில் கதை சற்று சுற்றி வருவது போல் தோன்றுகிறது. ஆனால் அந்த வீட்டுக்குள் பாட்டி வடிவில் வடிவுக்கரசி நுழைந்ததும் கதை வேகமெடுக்கத் தொடங்குகிறது. அவர் யார், அவரது கணவர் யார், அவர் செய்த தவறுகளுக்காக ஊர் மக்கள் எவ்வாறு தண்டனை அளித்தனர் என்பதைக் காட்டும் பிளாஷ்பேக் காட்சிகள் விறுவிறுப்பாக கதையை நகர்த்துகின்றன. அந்த வீட்டுக்குள் க்ராணியாக வடிவுக்கரசி நடத்தும் அச்சுறுத்தும் செயல்களே மீதமுள்ள கதையின் மையமாக அமைகிறது.

பங்களாவைப் போல் அமைந்த அந்த அழகான பழைய வீட்டில்தான் கதையின் பெரும்பகுதி நடக்கிறது. வீட்டின் கதவுகள், அதற்குள் நிறைந்திருக்கும் மர்மம், படிக்கட்டுகள் அனைத்தும் காட்சியமைப்பில் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னர் அங்கு நடைபெறும் சம்பவங்கள் பார்வையாளர்களை அச்சுறுத்துகின்றன. வீட்டில் இருக்கும் குழந்தைகளின் இதயங்களை கைப்பற்ற வடிவுக்கரசி நடத்தும் கொடூர செயல்களே கதையின் உயிராக அமைந்துள்ளது. பாட்டி கெட்டப்பில் வடிவுக்கரசி உண்மையிலேயே பயமுறுத்துகிறார். அவரது மேக்கப் முழுமையாக பொருந்தி இருக்கிறது. அதிகமாக பேசாமல், தனது நடிப்பின் மூலமாகவே கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வடிவுக்கரசியின் கொடூர சிந்தனைகளும் செயல்களும் திகிலின் அளவை மேலும் உயர்த்துகின்றன. இரண்டு குழந்தைகளையும், தன்னை தடுக்க வரும் காவல்துறையினரையும் அவர் துரத்தும் காட்சிகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில், அந்த வயதில் அவர் ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபட்டு, இளம் வயது போலீஸ்காரர்களை அடித்து வீழ்த்துவதை ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக உள்ளது. இந்த லாஜிக் மீறல் படத்தை சற்று பின்னோக்கி இழுக்கிறது. இருப்பினும், வடிவுக்கரசி இப்படிப்பட்ட வேடத்தில் நடித்துள்ளார் என்ற ஆச்சரியமும், அவரது கதாபாத்திரத்தின் பின்னணியும் படத்தின் முக்கிய பலமாக அமைகிறது.

அதிக அலட்டலுடன் பேசும் ஓவர் பில்டப் போலீஸ் ஏட்டாக வரும் சிங்கம்புலி பல காட்சிகளில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்; அதை சற்று குறைத்திருக்கலாம். ஆனால் கடைசி சில நிமிடங்களில் குழந்தைகளை காப்பாற்ற அவர் எடுக்கும் முயற்சி மனதில் பதிகிறது. இன்னொரு போலீஸாக வரும் திலீபன், அவர் பேசும் வசனங்கள் சரியாக அமைகின்றன. மாற்றுத்திறனாளிகளாக வரும் அந்த இரண்டு குழந்தைகளின் நடிப்பும், சில செயல்பாடுகளும் கவனம் ஈர்க்கின்றன. ஊர் தலைவராக வரும் கஜராஜ் ஏதோ பெரிய செயல் செய்வார் என எதிர்பார்த்தால், அவர் கையில் அரிவாளை தூக்கிக்கொண்டு ஓடுவதோடு நிற்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் வில்லனின் நடிப்பும், இளமையாக இருக்க வேண்டும் என்ற அவரது ஆசையும் மிரட்டலாக இருக்கிறது. இளமை மீது கொண்ட ஆசையால் உருவாகும் விபரீதங்களையும், அதனால் ஊரில் ஏற்படும் விளைவுகளையும் இயக்குநர் தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளார். பின்னணி இசை சராசரி ரகத்தில் இருந்தாலும், அந்த வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளில் மணிகண்டனின் ஒளிப்பதிவு வேலை கவனிக்க வைக்கிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading