வேலை கிடைக்காமல் தவித்து வரும் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்ணாக அனுபமா பரமேஸ்வரன் ‘லாக் டவுன்’ படத்தில் நடித்துள்ளார். வேலை தேடி ஒரு பார்ட்டிக்கு செல்லும் போது, தோழியின் வற்புறுத்தலால் அவர் மது அருந்தி மயக்க நிலையில் ஆழ்கிறார். அந்த சமயத்தில் முகம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, பின்னர் கர்ப்பமாகிறார். இந்த விஷயம் குடும்பத்துக்கு தெரியாமல், அந்த கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்கும் தருணத்தில் இந்தியா முழுவதும் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் மருத்துவர், மாத்திரைகள் என அனைத்தையும் தேடி அவர் அலைகிறார். அந்த காலகட்டத்தில் கருவும் வளர, இறுதியில் அனுபமா பரமேஸ்வரன் தனது கர்ப்பத்தை கலைத்தாரா, இல்லையா என்பதே ஏ.ஆர்.ஜீவா இயக்கியுள்ள இந்த லாக்டவுன் படத்தின் மையக் கருவாக உள்ளது.
கொரோனா காலகட்டத்தில் பலர் பலவிதமான சிரமங்களை சந்தித்த நிலையில், மது அருந்தியதால் ஏற்பட்ட ஒரு சம்பவத்தின் விளைவாக கர்ப்பமான கருவை கலைக்க ஒரு இளம் பெண் எவ்வாறு தவிக்கிறார் என்பதை மாறுபட்ட கோணத்தில் இயக்குநர் இந்த படத்தில் அணுகியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழில் நல்ல நடிகை என்ற பெயரை பெற்ற அனுபமா பரமேஸ்வரன், இப்படிப்பட்ட கதையில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்ற கேள்வி படம் பார்க்கும் பலருக்கும் எழும் வகையில், கதையில் சில கடுமையான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இந்த படம், பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தற்போது திரைக்கு வந்துள்ளது.
நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருப்பதால், இந்த படத்தில் தனி ஹீரோ கதாபாத்திரமே இல்லை. அனுபமாவின் கதாபாத்திரம், அவரது நடிப்பு, குறிப்பாக வேலை தேடி அலைவது, கர்ப்பத்தை கலைக்க முடியாமல் தவிப்பது, அதற்கான பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் கஷ்டப்படுவது, மருத்துவர்கள் மற்றும் மருந்துகளை தேடி ஓடுவது போன்ற காட்சிகள் பார்வையாளர்களை உருக்கும் வகையில் அமைந்துள்ளன. இதற்கிடையில் குடும்ப பிரச்னைகள், குடும்பத்தினரை சமாளிக்க வேண்டிய சூழ்நிலைகள் காரணமாக அவர் மனதளவில் உடைந்து போவது படத்தின் முக்கியமான காட்சிகளாக அமைகின்றன.
உளவியல் ரீதியாக ஒரு பெண் எவ்வாறு வேதனைப்படுகிறார் என்பதை சொல்லிய விதம் ஓரளவு நன்றாக அமைந்துள்ளது. அனுபமாவின் அப்பாவாக வரும் சார்லியும், அம்மாவாக வரும் நிரோஷாவும் பாசமிக்க மிடில் கிளாஸ் பெற்றோர்களாக நம்பகமாக நடித்துள்ளனர். அனுபமாவின் தோழியாக வரும் பிரியாகோதை வெங்கட் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்து, “யாருப்பா இந்த பெண்?” என்ற கேள்வியை எழுப்புகிறார். மிடில் கிளாஸ் குடும்பங்களின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் பெற்றோர்களின் தவிப்பை காட்சிப்படுத்திய விதம் இந்த படத்தின் முக்கிய பலமாக அமைகிறது.
