ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா 4’, ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரமான கர்ணனை மையமாகக் கொண்ட ‘மஹாவீர் கர்ணா’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். ஏற்கெனவே கர்ணன் தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் இடம்பெற்ற முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை பென் மூவீஸ் சார்பில் ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ஆர்.வி. ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. புராணக் காலத்தைப் பிரதிபலிக்கும் பிரம்மாண்ட அரங்குகள், கலை வடிவமைப்புகள் மற்றும் நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

‘மஹாவீர் கர்ணா’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. அடுத்த ஆண்டு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ராகவா லாரன்ஸுக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ‘மஹாவீர் கர்ணா’ படத்தின் சிறப்புப் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply