நடிகர் யாஷ் தற்போது தனது 19-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகையாகவும் இயக்குனராகவும் அறியப்படும் கீது மோகன் தாஸ் இயக்கி வருகிறார். வித்தியாசமான கதை களத்துடன் உருவாகி வரும் இந்த படம், யாஷ் ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம், அடுத்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக இப்படத்திலிருந்து நடிகைகளின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஏற்கனவே நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் ஹுமா குரேஷியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது பிரபல நடிகையும் பாடகியுமான தாரா சுதாரியாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் தாரா சுதாரியா ‘ரெபேக்கா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
