‘திரிஷ்யம் 3’ படத்தில் இருந்து விலகினாரா நடிகர் அக்ஷய் கண்ணா?

மோகன்லால் – இயக்குநர் ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து, தற்போது திரிஷ்யம் 3 படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஹிந்தியில் இந்த இரண்டு பாகங்களையும் ரீமேக் செய்து நடித்த நடிகர் அஜய் தேவ்கன், மூன்றாம் பாகத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்த முக்கிய நடிகர்கள் இந்தப் படத்திலும் தொடர்கிறார்கள். இரண்டாம் பாகத்தில், கண்டிப்புக்கு பெயர் போன பெண் போலீஸ் அதிகாரியான தபுவின் நண்பராக இன்னொரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷய் கண்ணா, மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதே கதாபாத்திரத்தை மலையாளத்தில் நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி நடித்திருந்தார். மலையாள திரிஷ்யம் 3 படத்திலும் முரளிகோபி தொடர்ந்து இடம் பெறுகிறார்.

இந்நிலையில், ஹிந்தி பதிப்பான திரிஷ்யம் 3 படத்தில் இருந்து அக்ஷய் கண்ணா விலகியுள்ளதாக தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் அவரது நடிப்பும், ரஹ்மான் டகாய்ட் என்ற கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அவர் தனது சம்பளத்தை உயர்த்திக் கேட்டதாகவும், அதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ளாததால் விலகியதாகவும் கூறப்படுகிறது. மேலும், கதாபாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கேட்டு ஏற்பட்ட கருத்து வேறுபாடும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading