சின்னத்திரை வாயிலாக அறிமுகமான நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் புகழைப் பெற்றார். பின்னர் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். ‘லிஃப்ட்’, ‘டாடா’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய மூன்று திரைப்படங்களிலும் நடித்து, தமிழ்ப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற அவர், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப் பகுதியைப் பிடிக்க தொடங்கியுள்ளார். இப்போது, இயக்குநர் நெல்சன் தயாரிப்பில், சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ‘Bloody Beggar’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், கவின், நெல்சன் ஆகியோர், நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் ‘மோஸ்ட் ப்ராமிசிங் நடிகர்’ விருதைப் பெற்ற கவின், அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் குறித்த நெகிழ்ச்சியான அனுபவத்தைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “நானும் நெல்சனும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தோம். அப்படியே அஜித் சாரைப் பார்க்கும் சந்தர்ப்பம் திடீரென கிடைத்தது.
அந்த சந்திப்பு வெறும் பத்து நொடிகளே இருந்தது. அவரைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வருவதற்குள், அஜித் சார் ‘Bye’ சொல்லி கிளம்பிவிட்டார். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அது அமையப்பெற்றது,” என்றார்.