அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி மாணவர்களுக்கான கல்விச் சேவையை பல ஆண்டுகளாக செய்து வரும் நிலையில், நேற்று அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் உதவிகளையும் வழங்கினர்.
நடிகர் கார்த்தி பேசும் போது, தனக்கு 2 வயசு இருக்கும் போதே கல்விக்கான அறக்கட்டளையை ஆரம்பித்து அப்போதிருந்தே அப்பா இதை நடத்தி வருகிறார் என்று அதன் 45வது ஆண்டு விழாவில் பேசினார். ஒரு படத்துக்காக வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை அப்போதே அப்படியே இந்த அறக்கட்டளைக்காக வங்கியில் போட்டு அதனை நடத்தி வருகிறார் என்றார். பல வருடங்களுக்கு முன்பாக தங்கம் ஒரு சவரன் 750 ரூபாய் விற்றுக் கொண்டிருந்த போது, முதல் பரிசாக மாணவர்களுக்கு 1000 ரூபாயும், 2வது பரிசாக 750 ரூபாயும், 3வது பரிசாக 500 ரூபாயும் வழங்கினார் என்றார்.
இறுதியாக நடிகர் சூர்யா பேசும் போது, கார்த்தி சொன்னதை போல ஆரம்பத்தில் நான் எதுக்குமே உதவாம இருந்தேன். ஒரு கார்மெண்ட் கம்பெனியில வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அதிலும் விருப்பமில்லாமல் இருந்தேன். சினிமாவுக்கு வருவேன், கேமரா முன்பு நிற்பேன் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. திடீரென அப்படியொரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். எதுவுமே தெரியாமல் கடைசியில் இருந்தால் கூட, போராடினால் முன்னேற முடியும் என்பதை கற்றுக் கொண்டேன். இன்றைக்கும் தமிழ்நாட்டில் முதல் முறை பட்டதாரிகள் இருக்கத்தான் செய்கின்றனர். கல்வி தான் நம்மை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும், அதை விட்டு விடாதீங்க” என சூர்யா செம எமோஷனலாகவும் மோடிவேஷன் அளிக்கும் விதமாக பேசினார்.