இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரித்துள்ள புதிய படம் “ஹிட் லிஸ்ட்” . இதில் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, சரத்குமார், சமுத்திரகனி, கௌதம் மேனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதால் கே எஸ் ரவிக்குமார் தொடர்ந்து ப்ரமோஷன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ரஜினி மற்றும் கே எஸ் ரவிக்குமார் இணைந்து துவங்கி பின்னர் கைவிடப்பட்ட படம் “ராணா”. இந்த படத்தை பற்றித் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கே எஸ் ரவிக்குமார் விளக்கமளித்துள்ளார். தசாவதாரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே அளவிலான மாஸாக ராணா உருவாக வேண்டும் என்று நினைத்ததாகவும், எந்திரன் படத்திற்கு பிறகு சிறப்பாக அமைய வேண்டும் என ரஜினி கூறியபோது ராணா படத்தை துவங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த படத்தை அனிமேஷன் முறையில் உருவாக்க திட்டமிட்டபோதும், கதைக்களத்தை பார்த்து ரஜினி லைவ் ஷூட்டிங்காக மாற்ற வேண்டும் என்று கூறியதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.படத்தின் வேலைகள் மிக வேகமாக நடந்ததாகவும், பூஜை நிகழ்ச்சி முடிந்து, தீபிகா படுகோனை வைத்து ஒரு பாடல் படமாக்கப்பட்டதாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார். அதே சமயத்தில், ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம் அடைந்ததாகவும் ரவிக்குமார் கூறினார். ரஜினி மீண்டு வருவதற்காக காத்திருந்ததாகவும், இந்த இடைவேளையில் விஜய் மற்றும் சில சிறிய பட்ஜெட் படங்களை இயக்கும் வாய்ப்புகள் வந்தபோதும், ரஜினிக்காக தொடர்ந்து காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து ரஜினி வந்தபோது, அவர் ஒரு வருடத்திற்கு நடிக்க முடியாத சூழல் நிலவியதால், திரும்பி அனிமேஷன் படத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்து, ராணாவிற்கு முன் கதை இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து எழுதிய கதை தான் “கோச்சடையான்” என்றும் ரவிக்குமார் குறிப்பிட்டார். அனிமேஷன் பற்றிய அறிவில்லாததால், அனிமேஷன் தெரிந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் படத்தை இயக்கட்டும் என்று கூறி, லண்டனில் உள்ள ஸ்டூடியோவில் ஷூட்டிங் செய்து படம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் “கோச்சடையான்” படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதியதாகவும், இதனிடையே “ராணா” படத்தின் முழு ஸ்கிரிப்டும் தன்னுடைய அலுவலகத்தில் உள்ளதாகவும் ரவிக்குமார் மேலும் கூறினார். ரஜினி, அஜித் போன்ற ஹீரோக்களுக்கு மட்டுமே இந்த கதை பொருந்தும் என்றும், விஜய் இனிமேல் படங்கள் செய்வாரா என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். “ராணா” படம் ஒரு கனவாகவே போனதாகவும், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.