இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் இந்த இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டிருக்கிறது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் ‘ஹிந்துஸ்தானி 2’ என்றும், தெலுங்கில் ‘பாரதியிடு 2’ என்றும் வெளியாகவிருக்கிறது.
இந்த வாரம் 12ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ‘இந்தியன் 2’ படத்தை விடத் தனக்கு ‘இந்தியன் 3’ திரைப்படம் தான் ரொம்ப பிடிக்கும் என்றும் அந்தப் படத்தின் கதை காரணமாகத்தான் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்டதாக கமல்ஹாசன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2′ படத்தில் கமல்ஹாசன் குறைந்த நேரம் மட்டுமே தோன்றுவார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ஷங்கர் இதற்குப் பதிலளித்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், கமல்ஹாசன் படம் முழுவதும் வருவார். அவர் திரையில் இல்லாதபோதிலும் எல்லாக் கதாபாத்திரமும் அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும்” என்று தெரிவித்தார்.’இந்தியன் 3’ படத்தில் சேனாபதியின் தந்தை கமல் கதாபாத்திரமும் இடம்பெறும் என்ற தகவல் ஏற்கெனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.