2006ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ. பள்ளிக்கூட வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர், இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தொடரின் மூலம் புகழ்பெற்ற ஸ்ரீ, பின்னர் பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ என்ற திரைப்படத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்திற்காக விஜய் டிவி சார்பில் சிறந்த அறிமுக நடிகர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீ ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சோன் பப்டி, வில் அம்பு, மாநகரம் போன்ற படங்களில் நடித்தார். இவற்றில் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு ஒரு படம் என்ற வகையில் வெளியானது. குறிப்பாக, 2017ஆம் ஆண்டு வெளிவந்த ‘மாநகரம்’ திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் படம் ஆகும். இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசந்திரா உள்ளிட்டோர் நடித்தனர். ஸ்ரீக்கு அந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரம் வழங்கப்பட்டது. பெரிய வெற்றியை பெற்ற இந்தப் படம், பின்னர் இந்தியில் ‘மும்பைக்கார்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதனையடுத்து, ஸ்ரீக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர், அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
தற்போது, நடிகர் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு படத்தில், அவர் எலும்பும் தோலுமாக வாடிய நிலையில் இருப்பது தெரியவந்ததால், பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். “ஸ்ரீக்கு என்ன ஆயிற்று?” என்றும், அவரை அடையாளமே தெரியவில்லை என்றும் பலரும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராமில் காலை, மதியம், இரவு சமைத்த உணவுகளை பகிர்ந்து வருகிறார். இந்தப் பதிவுகளைப் பார்த்தபோது, ஒரு சிறிய அறையில் தான் அவர் தங்கி இருப்பது போல தெரிகிறது. அழகான மற்றும் திறமையான நடிகரான ஸ்ரீ, தற்போது திரைப்படத்திற்காக ஒரு புதிய தோற்றத்துக்காக தயாராகி வருகிறாரா? அல்லது வாய்ப்புகள் இல்லாததால் சிரமப்படுகிறாரா? என்பதுபோல் பல ரசிகர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.