தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள சிவகார்த்திகேயன், தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமும் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில், பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கொட்டுக்காளி’ திரைப்படம், ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 13) சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “கொட்டுக்காளி மாதிரியான பல படைப்புகள் எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளிவரும். யாரையும் கண்டுபிடித்து, நான்தான் அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன் எனக்கு என்னைப் பற்றி பெருமையாக கூறுவது என் வழக்கமே இல்லை. ஏனென்றால் என்னை அப்படிச் சொல்லி பழக்கவழக்கமாக்கியிருக்கிறார்கள். ஆனால், நானெல்லாம் அப்படிப்பட்டவனாக இல்லை,” என்று கூறினார். அவரது இந்த பேச்சின் வீடியோ தனியாக ‘கட்’ செய்து சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியுள்ளது.
சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கத்தில் வந்த ‘மெரினா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், அவருக்கு கதாநாயகனாக பெரிய வெற்றியை ‘எதிர் நீச்சல்’ படம்தான் பெற்றுக் கொடுத்தது. அந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.