Tuesday, September 17, 2024

‘சாமானியன்’ படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சங்கர நாராயணன் (ராமராஜன்) மற்றும் அவரது நண்பர் மூக்கையா (எம்.எஸ்.பாஸ்கர்) சென்னையில் உள்ள அவர்களது நண்பர் ஃபஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு வருகிறார்கள். மறுநாள், சங்கர நாராயணன் தியாகராயர் நகரில் உள்ள வங்கிக்கு சென்று, வெடிகுண்டும் துப்பாக்கியும் காட்டி மிரட்டி, அந்த வங்கியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். வங்கி ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதியாக்குகிறார்.

அதே நேரத்தில், மூக்கையா வங்கி கிளையின் மேலாளரின் வீட்டையும், ஃபஸில் பாய் துணை மேலாளர் வீட்டையும் துப்பாக்கியால் மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். மூன்று சீனியர் சிட்டிசன்களின் கோபத்திற்கு என்ன காரணம்? இவர்கள் மூவரின் பின்னணி என்ன? இறுதியில் பிணைக்கைதிகளை காவல்துறை மீட்டதா? என்ற கேள்விகளுக்கு பதிலாக இயக்குநர் இராகேஷின் ‘சாமானியன்’ திரைப்படம்.

தொடக்கத்திலிருந்தே கருத்து ஊசி போட்டபடியே தப்பிக்கும் கதாநாயகன் ராமராஜன், ஆக்‌ஷனிலும் மிரட்டலிலும் சிறிதாக சிரமப்படுகிறார். ஆனால், இறுதிக்காட்சிக்கு முந்தைய சென்டிமென்ட் காட்சிகளில் தான் திறமையை வெளிப்படுத்துகிறார். பாசமும் ஆக்ரோஷமும் கொண்ட கதாபாத்திரத்திற்கு எம்.எஸ்.பாஸ்கர் தனது முதிர்ந்த நடிப்பால் உயிர் கொடுத்துள்ளார். ராதாரவியின் பங்களிப்பும் தேவையான அழுத்தத்தை காட்சிகளுக்கு வழங்கியுள்ளது.நக்‌ஷா சரண் மற்றும் லியோ சிவக்குமார் இரண்டாம் பாதி சென்டிமென்ட் காட்சிகளில் தேவையான உணர்வுகளை உணர்த்தி, கவனத்தை ஈர்க்கிறார்கள்.

‘டெம்ப்ளேட்’ வில்லனாக மைம் கோபி மட்டும் திகழ்கிறார். போஸ் வெங்கட், கே.எஸ்.ரவிக்குமார், தீபா சங்கர், ஸ்மிருதி வெங்கட், முல்லை, அபர்ணதி ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களாக வந்து, தங்கள் வேலையைச் செய்துள்ளனர்.சி.அருள் செல்வனின் ஒளிப்பதிவு படத்திற்கு நேர்மறையான தாக்கத்தை அளிக்கவில்லை. ராம் கோபியின் படத்தொகுப்பு பின்கதையைச் செறிவாக்கத் தவறுகிறது. இளையராஜாவின் இசையிலும் வரியிலும், சரத்தின் குரலிலும் ஒலிக்கும் ‘கண்ணான கண்ணே’ பாடல் மட்டும் பொருத்தமான இடத்தில் மனதைத் தொடுகிறது. அவரது பின்னணி இசை காட்சிகளை மெருகேற்ற உதவியுள்ளது.

எளிமையான கதாபாத்திரங்கள், அதிரடி திருப்பம், மாஸ் ட்விஸ்ட், சோகமான பின்கதை, ‘கருத்து ஊசி’ மாநாடு, சுபம் என்று யூகிக்கக்கூடிய ஒரு டெம்ப்ளேட் கதையை எழுதியுள்ளார் வி.கார்த்திக் குமார். புதுமையில்லாத திரைக்கதை என்றாலும், நடிகர்களின் பங்களிப்பால் முடிந்தளவிற்கு விறுவிறுப்பையும் உணர்ச்சியையும் சேர்க்க முயற்சித்துள்ளார் இயக்குநர் இராகேஷ். சில காட்சிகளில் படம் நேராகக் கதைக்குள் நுழைகிறது. அதன் பிறகு லாஜிக் காணாமல் போவதும், பழைய காவல்துறை – கொள்ளையர் காட்சிகளும் டல்லடிக்கின்றன.

இறுதிக்காட்சிக்கு முந்தைய உணர்ச்சியலான காட்சிகள் நன்றாக இருந்தாலும், இயக்குநர் அதோடு சேர்ந்து நான்கு பக்க கருத்து ஊசியையும் குத்துகிறார். வங்கிகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு இடையிலான திருட்டு உறவு, வீட்டுக்கடன் மூலமாக மக்களை எப்படிச் சுரண்டுகிறது என்பது பற்றிய லைன் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தித் திணிப்பு மற்றும் பெருமுதலாளிகளுக்கு வழங்கப்படும் கடன் வாராக்கடனாக ஆவது போன்றவற்றை ஒன்லைனர்களில் கலாய்க்கிறது படம். அதேநேரம், வீட்டுக்கடன் மீதான மோசமான பார்வையை, எந்த தரவுகளுமின்றி முன்வைக்கிறது.

- Advertisement -

Read more

Local News