நகைச்சுவை நடிகராக தனது திரையுலக பயணத்தைத் தொடங்கி, தற்போது கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் கிடைத்த சிறிய கதாபாத்திரங்களையும் திறமையாக செய்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, 2009ஆம் ஆண்டு வெளியான “வெண்ணிலா கபடிகுழு” திரைப்படத்தில் “பரோட்டா” சூரி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அதிகமான புகழைப் பெற்றார். அதன் பின்னர் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, ஒரு முக்கிய நடிகராக வளர்ந்தார்.

2023ஆம் ஆண்டு, வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் தொடர்ச்சியாக, “கருடன்”, “கொட்டுக்காளி”, “விடுதலை 2” ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து, தனது திறமையை நிரூபித்தார். தற்போது, “ஏழு கடல் ஏழு மலை” மற்றும் “மாமன்” ஆகிய படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், தனது கடந்த கால நினைவுகளை பகிர்ந்த நடிகர் சூரி, தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.அந்த வீடியோவில், ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் சூரி, எதிரே உள்ள புதிய கட்டிடத்தில் பெயிண்டர் ஒருவர் வேலை செய்து கொண்டிருப்பதை பதிவுசெய்துள்ளார். இதை பகிர்ந்து, சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தானும் இதே வேலை செய்ததை நினைவுகூர்ந்து, கடந்த காலத்தைக் கொண்டாடியுள்ளார்.