நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் ராஜேஷ் எம். இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “பிரதர்”. இதில் பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், ராவு ரமேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற “மக்காமிஷி” பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், “‘மக்காமிஷி’ பாடல் 100 சதவிகிதம் வெற்றிபெறும் என்பதை நான் முன்கூட்டியே அறிந்தேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாடலை நான் பதிவு செய்துவிட்டேன். ஆனால் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்திற்கு இந்தப் பாடல் சரியாக பொருந்தியுள்ளது. மக்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க பாடல்களும் முக்கிய காரணமாகின்றன. பொதுவாக மக்கள் முதலில் பாடலுக்காகவே திரையரங்குக்குச் செல்வார்கள்; பிறகு தான் படம் நல்லதா இல்லையா என தீர்மானிப்பார்கள். இதை மனதில் வைத்து, பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தேன்” என தெரிவித்தார்.
மேலும், இந்தப் படத்தில் பாடல்களைப் பாடிய அனைத்து பாடகர்களுக்கும் என் நன்றி. இந்த படத்தின் மூலம் மூன்று புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். அவர்களில் ஒருவர்தான் ‘மக்காமிஷி’ பாடலைப் பாடிய பால் டப்பா அனிஷ். இந்தப் பாடலை யார் பாடுவது என்று யோசித்து கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் ஒரு பாடகர் பாடிய பாடலின் யூடியூப் இணைப்பை எனக்கு அனுப்பினார். அந்த பாடலைக் கேட்டபோது, அவரின் குரல் இந்த பாடலுக்கு பொருந்தாது என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது, யூடியூப் எனக்கு பால் டப்பா பாடிய பாடலை பரிந்துரை செய்தது. அவர் பாடிய பாடலைக் கேட்டவுடன், அவரின் குரல் எனக்கு மிகவும் பிடித்தது, அதனால் அவரையே தேர்ந்தெடுத்தேன். யூடியூப்தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது என்று அவர் கூறினார்.
மேலும், “‘மக்காமிஷி’ பாடல் ஒரு சிஎஸ்கே ஆந்தம் போல இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதற்கேற்றாற்போலவே அது அமைந்தது” எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த விழாவில் ஜெயம் ரவியும், ஹாரிஸ் ஜெயராஜும் இணைந்து ‘மக்காமிஷி’ பாடலுக்கு ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.