தமிழ் சினிமாவைப் போலவே மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் தங்களுக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்குவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. பல நடிகர்கள் தங்கள் சொந்த தயாரிப்பில் நடித்தாலும், பெரும்பாலான ஹீரோக்கள் தங்களது நண்பர்களை அறிமுகப்படுத்துவதற்காகவே பட தயாரிப்பில் ஈடுபடுவது அதிகம். இந்நிலையில், இளம் முன்னணி நடிகராக உள்ள டொவினோ தாமஸ் தற்போது பட தயாரிப்பில் இறங்கியுள்ளார். முதன்முறையாக அவர் தயாரிக்கும் படத்திற்கு ‘மரண மாஸ்’ என்று பெயரிட்டுள்ளனர். சிவபிரசாத் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படம் ஒரு மாஸ் படம் அல்ல என்று தொடக்கத்திலேயே குறிப்பிடப்பட்டு, படத்தின் டைட்டில் போஸ்டரை டொவினோ தாமஸ் வெளியிட்டுள்ளார். இவர் நடித்த ‘மின்னல் முரளி’ என்கிற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கிய இயக்குனர் பஷில் ஜோசப் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு பிரித்விராஜுடன் இணைந்து நடித்த ‘குருவாயூர் அம்பல நடையில்’ திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக பஷில் ஜோசப் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நுனக்குழி’ என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் நஸ்ரியாவுடன் இணைந்து நடித்த ‘சூட்சும தர்ஷினி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், தற்போது ‘மரண மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பஷில் ஜோசப் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருவதால், இன்னும் சில வருடங்களுக்கு இயக்குனர் பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டார் என்று கூறப்படுகிறது.