தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், டி.எஸ்.கே. ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சஞ்சனா மற்றும் சுவாசிகா கதாநாயகிகளாக நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிதும் பாராட்டப்படுகிறது.
அட்டக்கத்தி தினேஷ், கெத்து எனும் கதாபாத்திரத்தில் தீவிர விஜயகாந்த் ரசிகராக நடித்துள்ளார். அவருக்கான பில்டப் பாடலாக, விஜயகாந்த் நடித்த ‘பொன்மனச்செல்வன்’ படத்தின் ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம், ஊருக்கு நீ மகுடம்’ என்ற பாடல் படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் திரையரங்குகளில் ஒலிக்கும்போது, ரசிகர்களின் ஆரவாரம் காரணமாக திரையரங்கு முழுவதும் அதிர்ந்தது. இதுவே விஜயகாந்துக்கு உண்மையான அஞ்சலியாக இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்தப் பாடல் மற்றும் படத்தின் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, ‘திரைப்படங்களில் கேப்டனின் பாடலை அல்லது போஸ்டர்களைப் பயன்படுத்தினால், காப்புரிமை குறித்து யாரிடமும் அனுமதி கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்து அல்ல, மக்களின் சொத்து,’ என்றார். முன்னதாக, விஜய் நடித்த ‘தி கோட்’ படத்தில், விஜயகாந்தின் ஏ.ஐ தோற்றம் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.