கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‘காந்தாரா’ படம், கன்னட ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. இப்படம் ரூ.400 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது, இது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான தேசிய விருதும், ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வரும் ரிஷப் ஷெட்டி, “கன்னட திரைப்படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெறுகின்றன. ஆனால் எங்கள் படங்களை எந்த ஓடிடி நிறுவனங்களும் வாங்குவதில்லை. இதனால் யூடியூப்பில் பதிவிடும் அவலத்திற்கு தள்ளப்படுகிறோம். இனிமேல் இதுபோன்ற படங்களை எடுக்கமுடியுமா என்று தெரியவில்லை. இரண்டு படங்களை தயாரித்து வருகிறேன். திரைப்படங்கள் எனக்கு எல்லாமே கொடுத்தது. வருங்காலத்தில் இதற்கு என்ன ஆகும் என தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், எனக்கு தேசிய விருது கிடைத்ததை மிகவும் கவுரவமாக உணர்கிறேன். காந்தாரா படத்தில் நான் என்னுடைய வேலையை செய்தேன். அதில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த விருது சொந்தமானது. எனது படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப குழுவின் சார்பாக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.