தமிழ் சினிமாவின் முக்கியக் கலைஞராக விளங்குவது கமல்ஹாசன். தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, பாடல் போன்ற பல துறைகளில் பன்முகத் திறமை கொண்டவர், கடந்த 64 ஆண்டுகளாக சினிமா உலகில் இருக்கிறார். அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் இன்று 64 வருடங்கள் நிறைவடைந்தது.தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் அவர் பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கடந்த ஏழு சீசன்களாக சிறப்பாக பணியாற்றி, டிவியிலும் தனி முத்திரை பதித்துள்ளார்.
மறக்க முடியாத பல கதாபாத்திரங்களில் நடித்து, இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர். தற்போது, மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்தடுத்து சில முக்கிய படங்களைத் தன் வசம் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய சினிமாக் கலைஞராகவும் அவர் பெருமையைக் கொண்டுள்ளார். அவருடைய இத்தனை ஆண்டுகால கலைப் பயணத்துக்கு சினிமா பிரபலங்களின் வாழ்த்துகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.