தமிழ் சினிமாவின் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான சில மணி நேரங்களிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்த படத்திற்கு பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை நேரத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் புதிய திரைப்படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய படம் டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும். முன்னதாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.