பெஸ்ட் நியூஸ் ஆங்கர் விருது புதிய தலைமுறையின் கார்த்திகேயனுக்கு விகடனால் வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கார்த்திகேயன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஊடகத்துறையில் நான் 15 வருஷமா இருக்கேன். இதுதான் என்னோட முதல் விருது, முதல் மேடை. ஆறாம் வகுப்பு படிக்கிறப்போ இருந்து தொடர்ந்து ஆனந்த விகடன் வாசிச்சிட்டிருக்கேன். என் வாழ்க்கையோடு நெருக்கமான பயணத்தைக் கொண்டது விகடன். என் அம்மா, தீப்பெட்டித் தொழிலாளி. அவங்க, ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திட்டாங்க. பொதுவா, ஜெயிக்கணும் அப்படின்னு எங்க அம்மாவுக்கு ஆசை கிடையாது; நான் நல்லவனா இருக்கணும்னு மட்டும்தான் ஆசைப்பட்டாங்க. ஏதாவது சின்னத் தப்பு பண்ணிட்டாகூட, ‘என் வயித்துல பொறந்துட்டு நீ இப்படியெல்லாம் பண்ணுறியா?’ன்னு கேட்பாங்க. சக மாணவர்களுடன் சின்னப் பிரச்னை ஏற்பட்டால்கூட பதற்றப்படக்கூடிய நபர், எங்க அம்மா. ஜெயிக்குறோம், தோற்குறோம்ங்கிறதைக் கடந்து நான் ஒரு நல்ல மனுசனா இருக்கறது முக்கியம்னு ரொம்ப தீர்க்கமா நம்புறவங்க எங்க அம்மா.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000047114-724x1024.jpg)
எங்க அப்பா, பார்க்காத வேலையே இல்ல. பால் வண்டி ஒட்டி, ஹோட்டல் நடத்தி, ஸ்டேஷனரி ஷாப் வைத்து, பல வேலைகள் பார்த்து வறுமையில் இருந்து குடும்பத்தை மீட்பதற்காக எங்களுக்காகக் கஷ்டப்பட்டார். எங்க பெரியப்பா, கவிதா பப்ளிகேஷனோட நிறுவனர். எனக்கு ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்ற பெரிய ஆளுமைகளை அறிமுகப்படுத்தி, வாசிப்பதில் ஆர்வம் ஊட்டியவர் அவர்தான். காசு இல்லாம சென்னை வந்தப்போ, நடராஜன் அண்ணா, அவர் மனைவி ஜெய் அக்கா ரெண்டு பேரும்தான், `சாப்பாடு இல்லையா சாப்பிட்டுக்கோ, எப்ப வேணாலும் இங்க வந்து தங்கிக்கோ’ன்னு அவங்க என்னைத் தத்தெடுத்துக்கிட்டாங்க இந்த நிலைமைக்கு வர்றதுக்கு அவங்களும் ஒரு காரணம். சீனிவாசன் சார், 11 வருஷத்துக்கு முன்னாடி இன்டர்வியூ பண்ணி என்னைப் புதிய தலைமுறைக்குள்ள கொண்டு வரலைன்னா, இன்னைக்குப் புதிய தலைமுறைல இந்த கார்த்திகேயன் இல்ல. ஜென்ராம் சாருக்கு ரஞ்சன் சாருக்கு இப்படி நிறைய பேருக்கு நன்றி சொல்லணும்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000047119-1024x645.png)
இறுதியா ஒரே ஒருத்தருக்கு மட்டும் நான் நன்றி சொல்கிறேன். எங்களுடைய நிறுவனத் தலைவர் திரு சத்யநாராயணன். நான் இஸ்ரேல் போறதுக்கு முன்னாடி அவர் என்கிட்ட, ‘என்ன இஸ்ரேலுக்குப் போகணும்னெலாம் ஆசையே இல்லையா, அங்க போய் நீங்க கவரேஜ் பண்ணணும்னு நினைக்கவே இல்லையா, பெரிய ஆளாக வேண்டாமா?’ன்னு கேட்டார். இப்படி பல வாய்ப்புகளை எனக்காக ஏற்படுத்திக் கொடுத்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000047116.jpg)
நான் 13 வருடங்களாக புதிய தலைமுறைல இருக்கேன். இது எனக்கு இரண்டாவது வீடு. நிறைய பேர் கேப்பாங்க, ஏன் புதிய தலைமுறையை விட்டு வெளில போறதில்ல அப்படின்னு. வீட்டுல இருக்குற அதே சுதந்திரம் எனக்கு புதிய தலைமுறைல கிடைக்குது. இந்த நிமிடம் வரை நான் புதிய தலைமுறைல இருப்பதற்கு சத்யநாராயணன் சாருடைய கன்ஸர்ன் எனக்கு பெரிய சப்போர்ட்டாக இருக்கு. விகடன் விருது மூலமாக எனக்கு கூடுதல் பொறுப்பு வந்திருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை மேலும் அதிகமாகுது. தொடர்ந்து சிறப்பா செயல்படணும்னு நினைக்குறேன்” என்று மேடையைக் கண்ணீரிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார்