நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென்று ஒரு இடத்தை பெற்றவர். ஆனால், கடந்த சில வருடங்களில் விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்களுடன் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர், இனிமேல் வில்லனாக நடிப்பதை தவிர்க்க வேண்டுமென்று அவர் முடிவு செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின.

இத்தகைய நிலையில், பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ எனும் படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபாஸ் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். ‘ஸ்பிரிட்’ என்பது பிரபாஸின் 25வது திரைப்படமாகும், மேலும் இதற்கான தயாரிப்பு செலவாக ரூ. 300 கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் முக்கிய எதிரி கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதியிடம் அணுகி, அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த வாரம் ஒரு சந்திப்பும் நடந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பணியாற்றுகிறார். மேலும், கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். இதில் சைப் அலி கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.