2023ஆம் ஆண்டு, நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்தார். இப்படம் ₹600 கோடிக்கும் மேல் வசூல் செய்து, வர்த்தக ரீதியாக பெரும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அதே இயக்குநர் – தயாரிப்பு குழுவால் உருவாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது, மேலும் அந்த அறிவிப்பு ரசிகர்களிடையே வைரலானது. தற்போது, ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என கூறப்படுகிறது.


இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் கூடுதல் அப்டேட்டாக, இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. எஸ்.ஜே. சூர்யா அல்லது செம்பன் வினோத் ஜோஸ் ஆகிய இருவரில் ஒருவர் இப்படத்தின் முக்கிய வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.விரைவில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.