‘லவ் டுடே’ திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதன், தற்போது “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (எல்.ஐ.கே) என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
மேலும், எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு, பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் நடித்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார்.
முழுமையாக காதல் கதையில் இப்படம் உருவாகியுள்ளது. பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன. தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், இதன் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, இப்படம் வரும் மே மாதம் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.