நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மத கஜ ராஜா கடந்த 2012ம் ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்டு 2013ம் ஆண்டிலேயே ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் அடுத்தடுத்த ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீசிலிருந்து பின்வாங்கியது.
இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது பொங்கலையொட்டி மத கஜ ராஜா படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தன்னுடைய கேரியரிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்று விஷால் கூறியுள்ள நிலையில், இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வெகு சிறப்பாக அமைந்துள்ளதாக சுந்தர் சி உற்சாகம் தெரிவித்துள்ளார்.
தற்போது நடந்துள்ள இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தப் படத்தின் ரிலீசை அறிவித்தபோது தான் மிகவும் பயந்ததாக தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு எப்படி இருக்கும் என்றும் சோசியல் மீடியாவில் கலாய்ப்பார்களே என்றும் தான் யோசித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது படத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பு தன்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் மொத்த படக்குழுவினரும் சந்தோஷ சர்ப்ரைஸ் ஆகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.