பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபதி, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்த ‘பாகுபலி 1’ (2015) மற்றும் ‘பாகுபலி 2’ (2017) ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து ஒரே திரைப்படமாக ‘பாகுபலி தி எபிக்’ என்ற பெயரில் இம்மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.

ஐமேக்ஸ், டால்பி விஷன், 4டிஎக்ஸ், டி பாக்ஸ், எபிக் போன்ற நவீன திரையிடல் தொழில்நுட்பங்கள் கொண்ட தியேட்டர்களிலும் இப்படம் வெளியாக உள்ளது. ‘பாகுபலி’ திரைப்படங்கள் வெளிவந்த காலத்தில் இத்தகைய நவீன நுட்பங்கள் கொண்ட தியேட்டர்கள் குறைவாக இருந்தன. ஆனால் இப்போது அந்த வசதிகள் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. எனவே, இப்படத்தை அகன்ற திரைகளில் பார்க்கும் ரசிகர்கள் புதிய அனுபவத்தை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘பாகுபலி தி எபிக்’ படம் சுமார் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் நீளமாக இருக்கும் என தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதில் முதல் பாகம் இடைவேளை வரை, இரண்டாம் பாகம் இடைவேளைக்குப் பிறகு திரையிடப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில பாடல்கள் மற்றும் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய தொகுப்பாக படம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, “பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்” என்ற முக்கியமான காட்சி இடைவேளைப் பகுதியில் இடம்பெறுகிறது. இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே திரைப்படமாக மறு வெளியீடு செய்யப்படுவது இந்திய சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.