‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. தனது அறிமுக படத்திலேயே சிறந்த நடிகை என்ற அடையாளத்தை பெற்ற அவர், பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றார். சமீபத்தில் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ மற்றும் ‘தண்டேல்’ எனும் இரு படங்களும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது இந்தி மொழியில் மிகுந்த பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு சமீபத்திய நேர்காணலில் சாய் பல்லவி, “எனக்கு விருதுகளைவிட ரசிகர்களின் அன்பே முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “தியேட்டர்களில் என் கதாபாத்திரங்களைப் பார்த்து, அந்த உணர்வுகளோடு ரசிகர்கள் தங்களை ஒருசேர இணைத்து கொள்வது எனக்கு உண்மையான வெற்றியாக தோன்றுகிறது. கதாபாத்திரத்தின் வழியாக நேர்மையாக கூறவேண்டிய கதைகளை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
நான் நினைத்தபடி ரசிகர்கள் அந்த கதாபாத்திரங்களுடன் உணர்ச்சிபூர்வமாக இணைந்து கொள்ளும்போது, அதுவே மிகப் பெரிய வெற்றியாக நான் கருதுகிறேன். அதனால்தான் நான் எப்போதும் விருதுகளைவிட, ரசிகர்களின் அன்பை பெறுவதே எனக்கு முதன்மையான விஷயமாக இருக்கிறது” என்றார்.