நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியுள்ள படம் “விடாமுயற்சி”. இப்படத்தில் அஜித் குமாருடன் ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் மேற்கொண்டுள்ளார், மேலும் படத்தொகுப்பை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியீட்டை பிற்போடுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின்னர், இப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், “பண்டிகை நாளில் படம் வெளியாகவில்லை என்றால் என்ன? நம் படம் வெளியாகும் நாளே ஒரு பண்டிகை நாளாகவே இருக்கும்,” என அஜித் கூறியதாக சமீபத்திய பேட்டியில் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார். அஜித், ஆணாதிக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான பண்பாட்டுச் சூழல்களில் உடன்பாடு இல்லாதவர் என்பதால், இந்த கருத்துகளை சுட்டிக்காட்டும் படத்தை உருவாக்க விரும்பினார். இந்த அம்சங்கள் அனைத்தும் “விடாமுயற்சி” படத்தில் உள்ளன. அஜித் தனது கதாபாத்திரத்திற்கு “அர்ஜூன்” என்று பெயரிட விரும்பினார். அஜித்தும் மகிழ் திருமேனியும் சேர்ந்து எதிர்காலத்தில் மேலும் பல படங்களில் இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார்.