சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், இந்த படம் சல்மானின் முந்தைய படங்களை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில், கஜினி படத்தில் இருந்தது போல சில தனித்துவமான அம்சங்கள் இடம்பெறுகின்றன. கஜினி படத்தில் இருந்த அதிரடியான காதல் கதை போலவே, இப்பதிலும் கணவன்-மனைவிக்கிடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெறும்.
தற்போதைய வாழ்க்கை முறையில் பலரும் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல் இருக்கின்றனர். அந்த உறவுகள், பெற்றோர், நண்பர்கள் அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் வேலை பற்றிய கவலைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த திரைப்படம் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக இருந்தாலும், அதில் ஒரு அர்த்தமுள்ள, அழகான கருத்தும் அடங்கி உள்ளது.
ஹாலிடே என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, நான் சல்மான் கானை சந்தித்தேன். அவரிடம் சென்று, “நான் உங்களை இயக்க விரும்புகிறேன்” என கூறினேன். அதற்கு அவர், “நானும் உங்கள் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என பதிலளித்தார். பின்னர், அவர் ஒரு கொரியன் படத்தை ரீமேக் செய்வது பற்றி கூறினார். ஆனால், அதை நான் நிராகரித்தேன். “நானே கதை எழுதிக் கொண்டிருக்கிறேன், அதை இயக்கவும் விரும்புகிறேன்” என சொன்னேன்.

பின்னர், தயாரிப்பாளர் நதியாத்வாலாவிடம் சென்று திட்டத்தை முடிவு செய்தோம். அதன் பின்பு, சில மாதங்கள் கழித்து, கதையை விரிவாக எழுதி, சல்மான் கானிடம் கூறினேன். அவர் 30 நிமிடங்களில் கதை கேட்டுவிட்டு, ஒரு சிறிய இடைவேளையில் சிகரெட் பிடிக்க சென்றார். பின்னர், “உங்களுடைய வேலை செய்யும் பாணி தெரியுமா?” என்று என்னிடம் கேட்டார். நான் “இல்லை” என பதிலளித்தேன். அதற்கு அவர், “மதியம் 2 மணி முதல் காலை 2 மணி வரை தான் என் வேலை நேரம்” என்று கூறினார்.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸை முடிவடையச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், இரு விதமான முடிவுகளாகவும் காட்சிகளை படம்பிடித்தோம். பின்னர் எடிட்டிங் பணியின் போது ஏற்ற முடிவை தேர்வு செய்யலாம் என்று தீர்மானித்தோம். ஆரம்பத்தில் நான் மதராஸி என்ற திரைப்படத்தை முதலில் முடிக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் சிக்கந்தர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததால், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் மாறிமாறி படப்பிடிப்பை நடத்தினேன்.அந்த நேரத்தில், சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் பாக்கி இருந்தது. அத்துடன், சிக்கந்தர் படத்தை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. இதனைப் பரிசீலனை செய்து, மதராஸி படத்தின் தயாரிப்பாளரிடம் சென்று பேசிப் சம்மதம் பெற்று விட்டேன்” என இயக்குநர் முருகதாஸ் கூறியுள்ளார்