இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில், நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். இப்படம் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி தினத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து, படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு முழுமையாக ஈடுபட்டு வருகிறது.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நேரத்தில், சில நெட்டிசன்கள் சாய்பல்லவியின் பழைய வீடியோவை பகிர்ந்து, படத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி பேசுகையில், “காஷ்மீர் பைல்ஸ் படத்தில் ஹிந்துக்களை கொல்வதைப் போலவே, நாட்டில் மாடு வைத்திருந்த இஸ்லாமியரை கொன்று விட்டனர். மதத்தின் பெயரில் இவ்வாறு செய்வது தவறு, இது பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தை தீவிரவாதிகள் போல பார்க்கும் அணுகுமுறையுடன் ஒத்துப் போகின்றது என்று கூறினார்.
அந்தப் பேச்சு அப்போது சர்ச்சையாக இருந்தது. அப்போது பதிலளித்த சாய்பல்லவி, “என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” என குறிப்பிட்டிருந்தார்.இந்த வீடியோவை தற்போது திடீரென பகிர்ந்துவரும் நெட்டிசன்கள், சாய்பல்லவியை நிராகரிக்க வேண்டும் என டிரெண்ட் செய்து வருகின்றனர். சாய்பல்லவியின் கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், இப்போது திடீரென பழைய வீடியோவை பரப்பி எதிர்ப்பு தெரிவிப்பது சரியில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.