2002ஆம் ஆண்டு, விஜய் நடித்த ‘யூத்’ திரைப்படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார். அந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் இயக்குநர் மிஷ்கின். பின்னர் 2006ஆம் ஆண்டு ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின், அதன் பின்னர் ‘அஞ்சாதே’, ‘முகமூடி’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘ட்ரெயின்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை அதன் தயாரிப்பாளர் எஸ். தாணுவுடன் இணைந்து நேற்று இரவு பார்த்து ரசித்துள்ளார் மிஷ்கின்.
படத்தை பார்த்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கின், ‘‘இந்த படம் பார்த்ததும் என் கல்லூரி நாட்கள் ஞாபகத்துக்கு வந்தது. நான் என் திரைப்பட பயணத்தை ‘யூத்’ படத்தின் உதவி இயக்குநராகத் தொடங்கினேன். ஆனால் ‘சச்சின்’ படம் திரையரங்கில் வெளியானபோது நான் அதை பார்க்கவில்லை. இப்போது தான் முதன்முறையாக பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது. காதலில் இருக்கும் போது எப்படி குழந்தைத் தனமாக இருக்கிறோமோ, அதைத்தான் படம் சொல்லி இருக்கிறது.
இந்த படத்தின் கிளைமேக்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. குறிப்பாக விஜய் மிகவும் ஹேண்ட்ஸமா காணப்படுகிறார். அவருடைய படங்களில் அவரை மிகவும் அழகாகக் காட்டிய படம் இதுதான் என நினைக்கிறேன். விஜய் போன்ற நடிகர் சினிமாவை விட்டு சென்றுவிடுவது மிகப்பெரிய இழப்பாக இருக்கும். அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அரசியலில் கவனம் செலுத்தினாலும், அவர் வருடத்திற்கு ஒரு படத்தில் எப்படியும் நடிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்’’ எனக் கூறியுள்ளார்.