தமிழ் சினிமாவில் மூத்த நடிகையாக விளங்குபவர் வடிவுக்கரசி. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் சுமார் 400 படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் கதாநாயகியாகவும், பல படங்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இன்றைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் இவர், சினிமாவைத் தவிர பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்.

இன்றைய காலத்தில் சினிமாவில் நடிக்க விரும்புபவர்களுக்கு சமூக வலைதளங்கள் பெரிய உதவியாக உள்ளன. குறிப்பாக, பிரபலங்கள் நடித்த அல்லது நடனமாடிய காட்சிகளை ரீல்ஸாக வெளியிட்டு பிரபலமடைந்து, சிலர் சினிமாவில் வாய்ப்பு பெற்றுள்ளனர். உதாரணமாக, நடிகை மிருணாளினி ரவியை சொல்லலாம். இந்நிலையில், ரீல்ஸ் மூலம் பிரபலமானவர்கள் சினிமாவில் சிரமப்படுவதாக வடிவுக்கரசி கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் பேசுகையில், “இப்போது பலரும் ரீல்ஸ் செய்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் அதிக பாலோயர்களைப் பார்த்து சில இயக்குநர்கள் சினிமாவில் வாய்ப்பு கொடுக்கிறார்கள். பெரிய நடிகர்கள் நடித்ததையோ, பாடியதையோ இவர்கள் எடுத்து ரீல்ஸாக வெளியிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு உண்மையான வசனங்களைக் கொடுத்து பேசச் சொன்னால் தடுமாறுகிறார்கள். நான் நடிக்கும் படங்களில் இதைப் பார்த்து, சில இயக்குநர்களிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள், ‘இவர்களுக்கு ஆயிரம் பாலோயர்கள் இருக்கிறார்கள்’ என்கிறார்கள். இவர்கள் தடுமாறுவதால் எல்லோருடைய நேரமும், பணமும் வீணாகிறது. ரீல்ஸ் என்பது பொழுதுபோக்குக்காக செய்யப்படுவது. ஆயிரம் பாலோயர்கள் அதுவரை மட்டுமே பயன்படும்” என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.