அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இந்த அறிவிப்பிற்குப் பிறகு அந்தப் படம் குறித்து வேறு எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இருந்தாலும், டோலிவுட் வட்டாரங்களில் இந்தப் படத்தைச் சுற்றி பல தகவல்கள் பரவி வருகின்றன.

முதலில், இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது, மூன்று ஹீரோயின்கள் நடிக்கவிருக்கின்றனர் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியங்கா சோப்ரா, தன்னிடம் தேதிகள் இல்லாததால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மற்ற முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேசப்பட்டுவருகிறது. இதில் ஜான்வி கபூர் நடிப்பது மிகவும் உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. மற்ற இரண்டு ஹீரோயின்களுக்காக அட்லி இயக்கக் குழுவினர் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்த விஷயம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பை இந்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளதால் கதாநாயகிகளை அந்த அடிப்படையில் தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார் என்பது கோலிவுட் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல். இப்படம் குறித்து பேச ஆரம்பித்ததும் அவரே இசையமைப்பாளராக நியமிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. அனிருத் இப்படத்தில் இடம்பெறவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.