பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி தற்போது வெப் தொடர்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ‘டெல்லி கிரைம்’ என்ற தலைப்பில் வெளியாகும் வெப் தொடரின் மூன்றாவது சீசனில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடரில் ஹுமா, “பாடி தீதி” எனும் வலுவான மற்றும் எதிர்மறை குணாதிசயங்களைக் கொண்ட கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளார்.

முந்தைய இரண்டு சீசன்களும் நெட்பிளிக்ஸில் வெளியானபோது பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது, மூன்றாவது சீசன் வருகிற 13ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
இதனை முன்னிட்டு, மும்பையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஹுமா குரேஷி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “‘டெல்லி கிரைம்’ சீசன் 1 மற்றும் சீசன் 2 இன் மிகப்பெரிய ரசிகை நான். இதில் நடிக்க அழைப்பு வந்தபோது, ஒரு குழந்தை தன்னுடைய பிடித்த பொம்மையுடன் விளையாடுவது போலவே மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இந்த தொடரில் நான் நடித்த கதாபாத்திரம் என் கெரியரில் இதுவரை நான் செய்த மிக மோசமான, அதேசமயம் மிக வித்தியாசமான வேடம்” என்று தெரிவித்தார். அவரது இந்த உரை நிகழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் மற்றும் மீடியா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

