தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்க உள்ளார். எப்போதும் தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவரும் யோகி பாபு, இப்போது அந்த தனிச்சிறப்பை தெலுங்கு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கிறார்.

இப்படத்தை முரளி மனோகர்ரெட்டி இயக்குகிறார். இதில் நகைச்சுவையின் ஜாம்பவானாகக் கருதப்படும் பத்மஸ்ரீ விருது பெற்ற பிரம்மானந்தம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் இரு பிரபல நகைச்சுவை நடிகர்கள் ஒரே திரைப்படத்தில் இணைவதால், இப்படத்துக்கு திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நேரத்தில் பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே மிகுந்த நட்பு உருவானது. பிரம்மானந்தம் தனது இல்லத்திற்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்து, இருவரும் மனம் திறந்து பேசினர். அப்போது, தன் வாழ்க்கை அனுபவங்களைப் பதிவு செய்துள்ள “நான் பிரம்மானந்தம்” எனும் புத்தகத்தை நினைவுப் பரிசாக யோகி பாபுவிடம் வழங்கினார்.
இந்த அனுபவம் குறித்து யோகி பாபு நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: “தெலுங்கு சினிமா என்னை இப்படிப் பட்ட அன்புடனும் ஆதரவுடனும் வரவேற்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பிரம்மானந்தம் சார் போன்ற ஒரு லெஜண்டுடன் இணைந்து நடிப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. நிச்சயமாக, பிரம்மானந்தம் மற்றும் நான் இணையும் ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் நகைச்சுவை விருந்தாக அமையும். இரண்டு திரையுலகங்களின் முக்கியமான நகைச்சுவைச் சொந்தங்கள் ஒன்றாக இணையும் இந்த படம், நகைச்சுவையின் திருவிழாவாக அமையும் என்றுள்ளார்.