தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான மற்றும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘பாலே உன்னதே’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மணீஷா கண்ட்கூர். தற்போது இவர் கன்னட திரைப்படத் துறையில் அறிமுகமாக உள்ளார். அதன்படி, டார்லிங் கிருஷ்ணாவுடன் இணைந்து ‘பிராட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஷஷாங்க் என்பவர் இயக்குகிறார்.

இந்நிலையில், திரைப்படத் துறையில் புதுமுகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மணீஷா பேசினார். அவர் கூறுகையில், “நான் முதலில் கன்னடப் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையுடன் இருந்தேன். ஆனால், அது ஒருவாறு சாத்தியமாகவில்லை. கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஆடிஷன்களில் கலந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு முதல் வாய்ப்பு கிடைக்கும் வரை மிகவும் பொறுமையுடன் மற்றும் விடாமுயற்சியுடன் காத்திருந்தேன்.
திரைப்படத் துறையில் புதியவர்களாக நாங்கள் எதிர்கொள்ளும் முதல் பெரிய சவால் என்பது ஆடிஷனில் தேர்ச்சி பெறுவதுதான். அதற்குப் பிறகு, ஒரு திரைப்படத்தில் நல்ல நடிகராக ஒருவிதமான முத்திரையை பதிப்பதுதான் அடுத்த பெரிய சவால். கன்னட திரையுலகில் அந்த முத்திரையை பதிக்கவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இயக்குநர் ஷஷாங்க் அவர்கள் இயக்கிய முந்தைய சில படங்களிலும் நடிக்க முயற்சி செய்தேன். பல ஆடிஷன்களில் கலந்துகொண்டேன். ஆனால் அதில் எதுவும் வெற்றி பெறவில்லை. இறுதியில், அவரது ‘பிராட்’ படத்தில் நடித்தும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்றார்.