தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து, தற்போது மாருதி இயக்கும் ஹாரர் காமெடி திரைப்படமான தி ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் யோகி பாபு உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் பணியாற்றி வருகிறார்.
காமெடியுடன் கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படம், ஆரம்பத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாகும் தேதி தள்ளிப்போனது. தற்போது தி ராஜா சாப் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் வருகிற டிசம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.