கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் “தக் லைப்” ஆகும். இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார், மேலும் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றியுள்ளார். இதற்கான பாடல்கள் மற்றும் டிரைலர் ஏற்கனவே வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த திரைப்படம் நாளை (ஜூன் 5ஆம் தேதி) பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வர உள்ளது.

அதே நேரத்தில், கன்னடம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்துகள் தொடர்பாக எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், இந்த விவகாரம் தீரும் வரை கர்நாடகாவில் “தக் லைப்” திரைப்படம் வெளியீடாகாது என்று கமல் தரப்பு தெரிவித்துள்ளது.
பொதுவாக, முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதற்கு முன்னர், தமிழக அரசு அந்த படங்களுக்கு சிறப்பு காட்சி நடத்த அனுமதி அளிப்பது வழக்கமாகும். அந்த அடிப்படையில், “தக் லைப்” படத்திற்கும் ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கான அனுமதிக்காக படக்குழு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதன்படி, நாளைய தினம் மட்டும் வழக்கமான நான்கு காட்சிகளுக்குப் பதிலாக ஐந்து காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு துவங்குகிறது.