இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் அமீர் கான், “நடிகர், நடிகைகளின் நட்சத்திர அந்தஸ்து நிரந்தரமானது அல்ல” என கருத்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இயற்கையின் சக்கரம் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கும். புதிய நடிகர்கள் வந்து சேர்வார்கள். பழையவர்கள் மறைந்து விடுவார்கள்.

நட்சத்திர ஒளி என்பது நிரந்தரம் இல்லாதது. சிலர் அதிக நாட்கள் அந்த ஒளியில் இருக்கிறார்கள். சிலர் குறுகிய காலமே பிரகாசிக்கிறார்கள். ஆனால் ஒரு நாளில் அந்த ஒளி மங்குவது உறுதி.
ஒவ்வொரு தலைமுறையிலும் ரசிகர்களால் விரும்பப்படும் புதிய நடிகர்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதால் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்போது வேண்டுமானாலும் நாங்கள் விலக வேண்டிய நேரம் வரும். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். புதிய நீர் வந்தால் பழைய நீரை அடித்துச் செல்லும். அது தான் இயற்கையின் நியதி,” என தெரிவித்துள்ளார்.