தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடித்த ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மற்றும் அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த புரோமோ வீடியோ மிகவும் நகைச்சுவையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ், அனிருத் ஆகியோர் அனைவரும் லுங்கி கட்டிக்கொண்டு அமர்ந்து பேசுகிறார்கள் . ‘மதராஸி’ படத்தின் முதல் பாடலாக ‘சலம்பல’ என்ற பாடல் வெளியிடப்பட உள்ளது. இந்த பாடல் ஜூலை 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.