இசைஞானி இளையராஜா நேற்று ,நெல்லையப்பர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின், திருநெல்வேலியில் அவரது இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நேற்று இரவு மிகுந்த கோலாகலமாக நடைபெற்றது.
திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் நான்கு வழிச்சாலையைக் கடைந்து, ரெட்டியார்பட்டி பகுதியில் அமைந்த திறந்தவெளி திடலில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி கேரளா மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து, இளையராஜா தனது இன்னிசை நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அப்பதிவில், “நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது! முன்பு நான் கூறியபடி, எனது கச்சேரி விரைவில் ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெறும். அடுத்ததாக எந்த ஊர்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.