நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்த திரைப்படம் ‘லூசிஃபர்’ 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மலையாளத்தைக் கடந்து பிற மொழி ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதன் பிரபலத்திற்கிணங்க, இப்படம் தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இந்த பதிப்பை மோகன்ராஜா இயக்கினார். ‘லூசிஃபர்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று பிருத்விராஜ் அறிவித்திருந்தார். அதன் படி, இரண்டாம் பாகத்திற்குப் ‘எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தினை லைகா நிறுவனம், ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கான கதையை முரளி கோபி எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி, முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000156308-717x1024.jpg)
இத்திரைப்படத்தில், பிருத்விராஜ் ராணுவ ஜெனரலாக நடித்துள்ளார். மேலும், இப்படம் வரவிருக்கும் மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, நடிகர் டொவினோ தாமஸின் பிறந்தநாளையொட்டி, ‘எம்புரான்’ திரைப்படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
தற்போதைய சூழலில், படத்தில் இடம்பெற்றுள்ள மோகன்லால், டொவினோ தாமஸ் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் கதாபாத்திரங்களை படக்குழு நாளை முதல் அடுத்தடுத்த நாட்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, நாளை முதல் காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என தினமும் இரண்டு வேளைகளாக, மொத்தம் 18 நாட்களில் 36 கதாபாத்திரங்கள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.