ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்தின் பூஜை நிகழ்வு நேற்று நடைபெற்ற நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பையனூர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அனிருத் இசையில் உருவாகியுள்ள ஒரு அதிரடியான குத்து பாடலுக்கு விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் அதிரடி நடனமாடுகின்றனர். இந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இதற்கான செட் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளது.
கமர்சியல் கதை என்றாலும் அரசியல் பின்னணி கொண்ட இந்த படத்தில் விஜய், ஒரு பாடல் காட்சியில் தனது கட்சியின் கொடியுடன் தோன்றுகிறார். இதோடு, படத்தின் போஸ்டரிலும், ஜனநாயகத்தை காக்கும் விதமாக தீப்பந்தம் ஏந்தி விஜய் போஸ் கொடுத்துள்ளார். மேலும், ஜனநாயக ரீதியான பல கருத்துக்களை முக்கியமான காட்சிகளில் விஜய் பேசுகிறார்.
குறிப்பாக, இதுவரை ஆட்சி செய்த கட்சிகளை விமர்சிப்பதை விடுத்து, இனி அரசியல் எப்படி இருக்க வேண்டும், இளைய தலைமுறை எப்படிப்பட்ட அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கான கருத்துக்களை வெளிப்படுத்தும் விதத்தில் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், தமிழில் உருவாகும் விஜய்யின் 69வது படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் டப் செய்து, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.