காஷ்மீரின் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றான பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பயங்கர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடூரச் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “காஷ்மீர் பகுதியில் நடந்த இந்த படுகொலையை கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன். காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் உறைய வேண்டியவை பனிக்கட்டிகள்தான்; இரத்தக் கட்டிகள் அல்ல. தீவிரவாதம் என்பது கோழைகளின் போர்முறையாகும். பூக்களின்மீது தொட்டுவைக்கப்படும் வன்முறையாகும்.
புலிகளின் மீது சினம் கொண்டே கிளிகளை கொல்வது நீதிக்கு ஏற்பதா? எந்தவொரு கோரிக்கையும் உடல்களில் ரத்தத்தால் எழுதப்படக் கூடாது. இந்திய அரசின் துப்பாக்கிகள் இனி தூக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும். இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் நடக்காதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். 28 உயிர்கள் முடிவுற்ற இடத்தில், இந்தியாவின் இருதயங்கள் இன்னும் துடிக்கின்றன. என் ஆழ்ந்த இரங்கலையும், இரத்தமும் சொற்களாகி வருத்தமாய் வந்திருக்கிறது” என்று அவர் பதிவு செய்துள்ளார்.