மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘விடாமுயற்சி’. ஆக்ஷன் மற்றும் அதிரடித் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 6) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம் பெற்றுள்ளது.
பொதுவாக, முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது முன்னிட்டு, தமிழக அரசு சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கி வருகிறது. குறிப்பாக, ‘துணிவு’ படத்திற்கு முன்பு அதிகாலை காட்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், அந்தப் படத்தின் சிறப்பு காட்சியில் ஒரு ரசிகர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டதால், தமிழகத்தில் அதிகாலை 4 AM மற்றும் 5 AM காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதன் காரணமாக, தற்போது காலை 9 மணி முதல்தான் திரைப்பட வெளியீட்டு காட்சி நடத்தப்படுகிறது. இருப்பினும், ‘விடாமுயற்சி’ படத்திற்கு மட்டும், படம் வெளியாவதற்கான நாளில் (பிப்ரவரி 6) ஒரே நாளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை ஒருநாளுக்கு மட்டும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலேயே இந்தப் படம் 900 முதல் 1000 தியேட்டர்களில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன