கூலி படத்தைத் தொடர்ந்து, தற்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த ஆகஸ்ட் 15ந்தேதி அவர் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், அவருக்காக சிலர் பாராட்டு விழா நடத்த முன்வந்தபோதும், அதை ரஜினிகாந்த் மெதுவாகத் தவிர்த்துவிட்டார்.

இதற்கிடையில், நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI)வில், ரஜினிகாந்தின் 50 ஆண்டு திரைப்பயணத்தை முன்னிட்டு அவர் கௌரவிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த சிறப்பு விழா வரும் நவம்பர் 28-ந்தேதி நடைபெறுகிறது.
அதேபோல, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இந்த விழாவில் கௌரவிக்கப்படுகிறார்., ரஜினி 1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார். அதேபோல் நடிகர் பாலகிருஷ்ணா 1974ல் தத்தம்மா காலா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனால் இவர் இருவரும் தங்களது துறைகளில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடித்துவரும் மூத்த திரை நட்சத்திரங்கள்.இந்த நிலையை கருத்தில் கொண்டு, ரஜினியும் பாலகிருஷ்ணாவும் நவம்பர் 28ந்தேதி கோவாவில் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு கௌரவம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

